கழுகுகின் கூடு
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். - (ஏசாயா 40:31).
கழுகு கூடு கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? அதை நாம் பார்த்திருக்க நியாயமில்லை. அது கட்டும் முறை மிகவும் அருமையானது.
தாய் கழுகு தன் கூட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போது, நாம் நினைத்திராதபடி, முட்களையும், சிறுசிறு கற்களையும், கிளைகளையும் கொண்டு வந்து, கட்ட ஆரம்பிக்கும். அதைக் கட்டி முடித்தப்பின், அதன் மேல், மெதுவான மிருதுவான பஞ்சு, மெலிதான இறகுகள், தான் சாப்பிட்ட மிருகத்தின் தோல் இவற்றைக் கொண்டு அதன் மேல் பரப்பி, தன் முட்டைகளை சுகமாக இருக்கும்படி, அவற்றை ஒழுங்குப்படுத்தும். பின் முட்டையிட்டு, அதை அடைக்காத்து, அது குஞ்சுகளாக வந்து, அவற்றிற்கு இரையைக் கொண்டு வந்து ஊட்டி, அவற்றை வளர்க்கும். அவை வளர்ந்து, பறக்கும் நிலையை அடைந்தவுடன், தாய்க் கழுகு தன் கூட்டை கலைக்க ஆரம்பிக்கும். குஞ்சுகள் சொகுசாக இருந்த பஞ்சு மற்றும், மெலிதான இறகுகள் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு விட்டு, முட்களையும், சிறுசிறு கூர்மையான கற்களையும் வெளியே வைத்துவிடும். அந்த மெத்தைப் போன்றவை போனவுடன், குஞ்சுகளுக்கு, கூடு குத்துகிற இடமாக, அவை தங்கியிருக்க முடியாத இடமாக மாறிப் போகும். அப்போது அவை தாமாக அந்தக் கூட்டைவிட்டு பறக்க ஆரம்பித்து, தன் இரையைத் தேட ஆரம்பிக்கும். பின், அவை தங்களுக்கென்று குடும்பத்தையும், வீட்டையும் கட்ட ஆரம்பிக்கும்.
நம்மில் கூட சிலர், அந்த கழுகின் குஞ்சுகளைப் போல தங்களுக்கு கிடைத்த கூட்டில் சுகமாய் இருக்கவே விரும்புகின்றனர். எழுந்து பறக்கக் கற்றுக்கொள்வோம் என்ற எண்ணம் சற்றும் இல்லாதவர்களாக, பெற்றோரின் நிழலில், மற்றவர்களின் உதவியில் வாழவே விரும்புகிறார்கள்.
கர்த்தர் அந்த சுகங்களை எடுத்துவிட்டு நம்மை பறக்க ஆயத்தப்படுத்தினால் அவரை குற்றம் சொல்லாதிருங்கள். நாம் பறந்து நம் காலில் நிற்பதையே கர்த்தர் விரும்புகிறார், நாம் நம்மால் இயன்ற அளவு எவ்வளவு தூரம் பறந்து செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் பற்ந்துச் செல்வதையே விரும்புகிறார். இன்னும் சொல்லப் போனால், நாம் நம்முடைய பிரச்சனைகள், பாடுகள், போராட்டங்கள் எல்லாவற்றையும் விட்டு உயரத்தில் தேவனோடு, உறவாடி, நம்மால் இயன்ற அளவு, அவருக்குள் வளருவதையே கர்த்தர் விரும்புகிறார்.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்ளூ அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள் (ஏசாயா 40:31) என்று வசனம் சொல்கிறது. ஆகையால், எந்த உலக காரியங்களானாலும், நம்மை அவரிடமிருந்து, பிரிக்காதபடி, அவருக்கு காத்திருந்து, புதுப் பெலனை அடைந்து, உயரே எழும்பி, அவருக்காக வாழ்வதையே கர்த்தர் விரும்புகிறார். அவருக்கு காத்திருக்கிறவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துப் போகார்கள். அவர்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் அதினிமித்தம் அவர்கள் சோர்ந்துப் போகாதபடி தங்களைக் கர்த்தருக்குள் காத்துக் கொள்வார்கள். தேவன் அவர்களை பெலப்படுத்துவார். கழுகிற்கு வயதாகி தன் பெலனை எல்லாம் இழந்துப் போகும்போது, ஒரு கன்மலையின்மேல் போய் அமர்ந்து, தன் இறகுகள் எல்லாம் விழுந்து, புதிதான இறகுகள் முளைக்கும் வரை காத்திருக்குமாம். புதிதான இறகுகள் முளைத்தவுடன், உயர எழும்பி பறக்கும். அதுப்போல கர்த்தருக்கு நாம் காத்திருக்கும்போது, அவர் நமக்குத் தரும் புது பெலத்தினால் உலகையும் சததுருவையும் எதிர்கொள்ள தேவன் நம்மை பதுபெலத்தினால் நிரப்புகிறார். அதற்காக நாம் ஜெபத்தில் காத்திருக்க வேண்டும், அவர் தரும் வாக்குதத்த வசனத்தை நினைவு கூர்ந்து, அவருடைய நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். உபவாசித்து காத்திருக்க வெண்டும். அப்போது அவர் நமக்குத் தரும் பெலன் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல இருக்கும். ‘காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு’ - (எண்ணாகமம் 23:22).
கர்த்தருக்கு காத்திருந்து
கழுகுப் போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்
புது பெலன் அடைந்திடுவாய்
.
ஜெபம்
எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல தகப்பனே, உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் பெலனற்றுப் போனவர்களாயிருந்தாலும் உமக்கு காத்திருக்கும்போது, நீர் எங்களை புது பெலனால் நிரப்புவதற்காக ஸ்தோத்திரம். நீர் எங்களுக்கு காண்டாமிருகத்தின் பெலனுக்கொப்பான பெலனை தருவதற்காக ஸ்தோத்திரம். உமக்கு காத்திருந்து புதுபெலனை பெற்றுக் கொள்ள எங்களுக்கு கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment