தேவ பிள்ளைகள் வாழ்க்கையில் நடந்த காலதாமதங்கள்
----------------------------------------------------------------
1) ஈசாக்கு பிறப்பதற்கு ஏற்பட்ட காலதாமதம்
------------------------------------------------------------------------
ஆபிரகாம் முதிர் வயதாயிருக்கையில் சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறிந்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனை பெற்றாள் (ஆதி 21:1,2)
ஆபிரகாமுக்கு 75 வயதில் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் 25 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. ஆபிரகாமின் வாழ்க்கையில் ஏன் ஆண்டவர் 25 ஆண்டுகள் காலதாமதம் செய்தார். இந்த 25 ஆண்டு கால இடைவெளியில் ஆபிரகாமும், சாராரளும் ஆண்டவரது வாக்குத்தத்ததை நம்புவதில் சற்று தடுமாற்றம் அடைகிறார்கள். அதன் விளைவாகதான் ஆபிரகாமிற்கு வேலைக்காரி ஆகார் மூலமாக இஸ்மவேல் பிறக்கிறான். ஆபிரகாமின் விசுவாசத்தை ஆண்டவர் சோதிக்க விரும்பினார். .
நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி. பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார் (ஆதி 15:5) இது தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தம். இந்த வாக்குத்தத்தம் நிறைவேற ஆபிரகாம் 25 ஆண்டுகள் காத்திருந்தான்.
அருமையான தேவ பிள்ளையே! உனக்கு ஆண்டவர் சில வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அது உன் வாழ்க்கையில் இன்னும் நிறைவேறவில்லையே என்று அங்கலாய்க்கிறாய். நீ பொறுமையுடன் காத்திரு. சொன்னதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?"(எண் 23-19)
2) அன்னாளுக்கு சாமுவேல் பிறப்பதற்கு ஏற்பட்ட காலதாமதம் (1 சாமு 1-19)
------------------------------------------------------------------
தனக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம் அன்னாளை வாட்டியது. அவள் கர்ப்பத்தை கர்த்தர் அடைத்தார் (1 சாமு 1:5) என்று வேதத்தில் வாசிக்கிறோம். சாதாரணமாக மற்ற பெண்களுக்கு குழந்தை பிறப்பது போல அன்னாளுக்கு குழந்தை பிறந்திருக்குமானால், அக்குழந்தையை ஆண்டவரது பணிக்காக ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டிருக்காது. ஆண்டவரது சித்தம் நம் வாழ்வில் நிறைவேற வேண்டும் என்பதுதான் ஆண்டவரது நோக்கம். இந்த செய்தியை வாசிக்கிற நீ சோர்ந்து போகாதே. ஆண்டவரது சமுகத்துக்கு போ. உன் இருதயத்தை ஊற்றி ஜெபி (சங் 62:8)
3) நோவாவின் பேழை தரைமட்டத்திற்கு வர ஏற்பட்ட காலதாமதம்
------------------------------------------------------------------------
"தேவன் நோவாவையும், சகல மிருகங்களையும் நினைத்தருளினார். தேவன் பூமியின் மேல் காற்றை வீசப் பண்ணினார். அப்பொழுது ஜலம் அமர்ந்தது. அப்பொழுது நோவாவும், அவன் மனைவியும், அவன் குமாரரும், அவர்களது மனைவிகளும் பேழையிலிருந்து இறங்கி வந்தார்கள் (ஆதி 8:1,18).
பேழையின் கதவு அடைக்கப்பட்ட போதுதான் நோவா கடைசியாக ஆண்டவரை பார்த்தான். பேழையிலுள்ள உணவு பண்டங்கள், மிருகத்திற்கான தீவனங்கள் எல்லாம் குறைந்தது கொண்டே வந்தது. "ஆண்டவர் தான் என்னை பேழையைக் கட்டுப்படியான உத்திரவிட்டார். கதவை அடைத்ததும் அவர்தான்; எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதும் ஆண்டவரது கரத்தில்தான் இருக்கிறது" என்று கூறி தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொண்டான். பேழையில் உள்ள 8 மனித உயிர்களையும், மற்ற ஆயிரமாயிரம் உயிரினங்களையும் ஆண்டவர் எப்படி மறப்பார் ? தாய் தன் பாலகனை மறந்தாலும், நான் உன்னை மறவேன் (ஏசா 49:15)
ஆண்டவர் நோவாவை மறக்கவில்லை. மாறாக ஏற்ற வேளைக்காக அவர் காத்திருந்தார். தண்ணிர் வற்றாமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. தேவ பிள்ளையே! நோவாவும் அவனது குடும்பத்தினரும், பேழையிலிருந்த உயிரினங்களும் தரையில் இறங்க ஏறக்குறைய 190 நாட்கள் காத்திருந்தார்கள். அது போலவே நீயும் நானும் ஆண்டவருடைய வேளைக்காக காத்திருப்போம்.
4) யோசேப்பின் கனவு நிறைவேறுவதில் கால தாமதம்
------------------------------------------------------------------
யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்கு முன்பு வந்து முகங்குப்புற தரையில் விழுந்து அவனை வணங்கினார்கள். யோசேப்பு தன் சகோதரர்களை குறித்து தான் கண்ட சொப்பனங்களை நினைத்தான் (ஆதி 42:6,9).
ஆண்டவர் அவனுக்கு சொப்பனத்தை கொடுத்த போது அவனது வயது 16 அல்லது 17. யோசேப்பின் கனவு நனவாவதற்கு எத்தனை பாடுகள் படுகிறான். சோதனை மேல் சோதனை (சகோதரர்களால் படுகுழிக்குள் தள்ளப்பட்டு விற்கப்படுகிறான் அடுத்த சோதனை போத்திபார் மனைவி மூலம் வந்தது.எதற்காக இப்படிப்பட்ட சோதனைகளை யோசேப்பின் வாழ்க்கையில் ஆண்டவர் அனுமதித்தார் ? அந்த நாட்டின் அதிபதியாக போகிறவன் இந்த பெண்கள் விஷயத்தில் நேர்மையுள்ளவனாக இருக்கிறானா என்று சோதித்துப் பார்த்தார். இந்த பாலிய இச்சையின் சோதனையில் பலர் விழுந்திருக்கிறார்கள்.
பல ஊழியர்களும் விழுந்திருக்கிறார்கள்) யோசேப்பின் கனவு 21 ஆண்டுகளுக்கு பின்புதான் நிறைவேறியது.
5) தாவீது இராஜாவாக ஏற்பட்ட காலதாமதம்
----------------------------------------------------------------------
"என் தேவனுக்காக நான் காத்து, காத்து என் கண்களும் பூத்துப் போயிற்று (சங் 69:1-3)
தாவீது சவுலுக்கு பயந்து வனாந்திரங்களிலும், குகைகளிலும் பதுங்கி வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் மேற்கண்ட வார்த்தைகளை கூறினான்.
சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணினான். அதை உறுதிபடுத்தும் வண்ணமாக, தாவீது கோலியாத்தை கொன்று ஒரு வீரச் செயல் புரிகிறான். ஆனாலும் விரைவில் அரண்மனையை விட்டு துரத்தப்படுகிறான். வனாந்திரத்திலும், குகைகளிலும் வாழும் ஒரு வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறான். என்னை இஸ்ரவேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினது உண்மையானால் எனக்கு ஏன் இந்த வனாந்திர வாழ்க்கை என்றெல்லாம் தாவீது யோசித்திருக்கக் கூடும். ஆனால் ராஜாவாக மாறுவதற்கு முன் தாவீதை ஆண்டவர் சோதிக்க விரும்பினார். ஆண்டவர் தாவீதின் பரம எதிரியாகிய சவுலை தாவீதின் கையிலே ஒப்புக் கொடுத்ததன் மூலமாக ஆண்டவர் தாவீதை சோதித்தார். தாவீதை தேடி வந்த சவுல் தாவீதின் கையில் சிக்கிக் கொள்ளுகிறான். தாவீதின் நிலையில் உள்ள எந்த மனிதனும் கொல்லத்தான் பார்ப்பான். ஆனால் தாவீது சவுலை கொல்ல மறுத்து விட்டான். ஒரு முறை மாத்திரமல்ல, இரண்டு முறை இது நடக்கிறது. எதிரியை மனப்பூர்வமாக மன்னிக்கும் இந்த பரிச்சையில் தாவீது நல்ல மதிப்பெண்கள் பெற்று பாஸ் பண்ணிவிட்டான். பின்புதான் ஆண்டவர் அவனை ராஜாவின் ஸ்தானத்தில் உட்கார வைக்கிறார்.
தாவீதை போலவே ஆண்டவர் உன்னையும் உயர்த்துவார். ஆனாலும் அதற்கு முன்பாக உன்னை சில சோதனைக்குள்ளாக்க விரும்புகிறார். உன்னை தகுதிபடுத்த விரும்புகிறார்.
6) இயேசுவின் இரண்டாம் வருகை (2 பேதுரு 3:9, யாக் 5:7,8)
------------------------------------------------------------------------
இயேசுவின் வருகைக்காக நாம் காத்திருந்து 2000 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஏன் இயேசுவின் வருகை தாமதிக்கிறது? அதற்கு காரணம் "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டும் (2 பேது 3:9). நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாக இருக்கிறோமா ? இயேசுவின் இரண்டாம் வருகை நம்மை பரிசுத்தப்படுத்துகிறது. அவரது வருகையை பற்றிய எண்ணங்கள் இந்த உலகத்தையும், அதில் உள்ளவைகளையும் வெறுப்பதற்கு உதவுகிறது.
இதை வாசிக்கிற தேவபிள்ளையே தெய்விகத் தாமதங்கள் உனது வாழ்க்கையில் இருக்குமானால் நீ கலங்கிட வேண்டாம். அவரது வேளைக்காக காத்திரு. ஆண்டவரது ஆசிர்வாதம் எவ்வளவு காலதாமதமாகிறதோ, அந்த அளவிற்கு நமக்கு கிடைக்கவிருக்கும் ஆசிர்வாதமும் பழுத்து, கனியாகி இனிமையாக இருக்கும்.
"என் வேளை இன்னும் வரவில்லை என்றார்" (யோ 2:4)
"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்: விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்"
(நீதிமொ 13:12)
"ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்"
(1 பேதுரு 5:6)
No comments:
Post a Comment