கர்த்தர் உன்னோடு இருக்கிறார்
"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். ... கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை ... ரட்சிப்பாய் ... என்றார். அதற்கு அவன்; ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்"* (நியா. 6:12-15).
இங்கு தேவன் தம் மகத்தான வேலைக்காகக் கிதியோனைத் தெரிந்துகொள்ளுகிறதையும், அதற்காக அவனை வேறுபிரிக்கிறதையும் நாம் காண்கிறோம். அப்பணியை மேற்கொள்ள கிதியோன் எவ்வளவு தகுதியற்றவனாகவும் பெலவீனனாகவும் தோன்றுகிறான் என்பதை 15-ஆம் வசனம் காண்பிக்கிறது. தேவன் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் பைத்தியமானவைகளையும், பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் பலவீனமானவை களையும், உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தெரிந்துகொண்டார் என்பது எவ்வளவு உண்மையானதாயிருக்கிறது. (1 கொரி. 1:27,28)
கர்த்தருடைய தூதனானவர், "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்று கிதியோனை நோக்கிக் கூறுகிறார். 'பராக்கிரமசாலி' என அவர் அவனை அழைப்பது விநோதமானதாயிருக்கிறது. ஏனெனில் பராக்கிரமசாலி என்றோ அல்லது மிகப் பெரியவன் என்றோ அழைக்கப்படத்தக்க யாதொரு பண்பையும் இவனில் நாம் காண்பதில்லை. மேலும், "ஆ என் ஆண்டவனே,
கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்?... எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களையெல்லாம் ஏங்கே?" என்று அவன் கேட்ட கேள்விகள் அவன் நிராசையடைந்த நிலையில் இருந்தான் என்பதை நிரூபிக்கின்றன் (நியா. 6:13).
இருப்பினும், கிதியோனுடைய சோர்வுற்ற நிலை தேவன் அவனுக்குள்ளும் அவன் மூலமாகவும் கிரியை செய்வதற்கு ஒரு தடையாயிருக்கவில்லை. தேவனின் உயரிய கிருபை கிதியோனைத் தேவ ஊழியனாகத் தெரிந்துகொண்டது
மட்டுமின்றி, அவனை இஸ்ரவேல் ஜனங்களின் தலைவனாகவும் தெரிந்துகொண்டது... இந்தக் கோழையான, சந்தேகிக்கிற, சோர்வுற்ற மனிதனைக்கொண்டு தேவன் அக்காலத்தின் மிகப் பெரியதோர் அற்புதத்தை நடப்பித்தார். கடற்கரை மணலத்தனையாயிருந்த மீதியானியரின் சேனையைக் கிதியோன் முந்நூறு பேரைக் கொண்டு நொறுக்கிப்போட்டான்.
*'நீ உன்னைக் குறித்து நம்பிக்கையிழந்து போகாதபடி ஜாக்கிரதையாயிரு; நீ உன் மேல் அல்ல, உன் தேவன் மேலேயே நம்பிக்கைவைக்கும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறாய்'* என்று புனித அகஸ்டின் கூறியிருக்கிறார். தேவபிள்ளையே நீ ஒரு கிபியோனாயிருக்கக் கூடும். நீ கவலையும், சந்தேகமும் நிறைந்தவனாயிருக்கக் கூடும். ஆனால் கிதியோனைத் தெரிந்துகொண்ட தேவன் உன்னுடன் இருக்கிறார். தேவனாகிய கர்த்தர் உனக்காகப் பெரிய திட்டங்களை வகுத்திருக்கிறார். உன் மூலம் அவர் பெரிய காரியங்களைச் செய்யவும் போகிறார். *தேவன் உன்னுடனேகூட இருப்பதால் உண்மையாகவே நீ ஒரு பராக்கிரமசாலியாயிருக்கிறாய். "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ", "இந்த பலம்' தான் என்ன? அது தேவன் உன்னோடே இருப்பதும், மகிமையின் தேவன் உன்னோடே இருப்பதும், ஜெயத்தின் தேவன் உன்னோடே இருப்பதும் தானே!*
No comments:
Post a Comment