இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்
*"கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?"* (ரோமர் 8:36).
போதகர் ஒருவர் ஒரு தரிசனம் கண்டார். அதில் மூன்று சகோதரிகள் முழங்காற்படியிட்டு ஜெபித்துக்கொண்டிருக்கையில் கர்த்தராகிய இயேசு அங்கு வந்தார். அவர் முதல் சகோதரிக்குச் சமீபமாகக் கூட செல்லாமல், அவளைக் காணாதவர் போல இருந்தார். இரண்டாம் சகோதரியை நோக்கி அவர் ஒரு புன்முறுவல் செய்துவிட்டு, மூன்றாம் சகோதரியிடம் சென்று அவளுடைய தலையின்மேல் தமது கரத்தை வைத்தார். இதைக் கண்ட போதகர், முதல் சகோதரி கர்த்தரில் அன்புகூருவதில்லை போலும் என நினைத்தார். கர்த்தர் புன்முறுவலோடு நோக்கிய அந்த இரண்டாம் சகோதரி அவரைச் சிறிதளவு நேசிக்கிறவளாய் இருக்க வேண்டும் என்றும், மூன்றாம் சகோதரி அவரை நிச்சயமாகவே மிகவும் அதிகமாக நேசிக்கிறவளாய் இருக்க வேண்டும் என்றும் அந்தப் போதகர் நினைத்தார். அவர் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கையில்,கர்த்தர் தாமே அவருடன் இவ்வாறு பேசினார் "என் மகனே, உண்மையோ நீ நினைத்ததற்கு நேர்மாறானது. முதலாம் சகோதரி என்னை மிகவும் அதிகமாக நேசித்து, என் அன்பை மிக அதிகமாக நம்பியிருக்கிறாள், ஆகவே நான் அவளுடைய ஜெபங்களுக்கு உடனடியாகப் பதில் அளிக்காவிட்டாலும், நான் அவளுடன் பேசாவிட்டாலும், அவள் அசைக்கப்படுவதில்லை என்றும், அவள் என்னை விட்டுப் போகமாட்டாள் என்றும் நான் அறிவேன். ஆகையினாலேயே நான் அவள் அருகில் செல்லவில்லை. இரண்டாம் சகோதரி சற்று நிலையற்றவள். எனவே அவ்வப்போதாகிலும் நான் அவள்பால் எனக்குள்ள அன்பையும், கரிசனையையும் அவளுக்கு வெளிப்படுத்தாவிடில் அவள் சோர்ந்துபோய்விடுவாள். மூன்றாம் சகோதரி ஆவிக்குரிய பிரகாரமாக மிகவும் பெலவீனமானவள். அவளுக்கு என் மீது ஆழமற்றதோர் அன்பு மாத்திரமே உள்ளன. அவள் கேட்பதை நான் உடனே அவளுக்குக் கொடுக்காவிட்டால், அவள் முறுமுறுத்து, முறையிட்டு, என் மீதுள்ள தனது அன்பில் குளிர்ந்து, ஒருவேளை என்னை விட்டுவிடவும் கூடும்'.
*அருமையான தேவபிள்ளையே, நீ அந்த மூன்றாம் சகோதரியைப் போல் இருக்கிறாயா? உன் ஜெபத்திற்குக் கர்த்தர் பதில் கொடுக்காதபோது, அல்லது உன் திட்டங்களும், வாஞ்சைகளும் நிறைவேறாமற்போகும்போது அவர் மீதுள்ள உன் அன்பு அசைக்கப்படுகிறதா? நாமும், அப். பவுலைப் போல, "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" என்று சொல்ல கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. அவருடைய அன்பை விட்டு ஒன்றும் நம்மைப் பிரிக்க முடியாத அளவுக்குப் பலமான அன்பினால் கர்த்தர்தாமே நம் இருதயங்களை நிரப்புவாராக!*
No comments:
Post a Comment