மெய்பலனை பெறுவது
துன்மார்க்கன் விருதாவேலையைச்செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான் (நீதிமொழிகள் 11:18)
.
இந்த வசனத்தில் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள். ஒருவன் துன்மார்க்கன், மற்றவன் நீதிமான். ஆனால் துன்மார்க்கன் செய்யும் வேலை வீணாய் போகிறது. விருதாவாக அவன் வேலை செய்கிறான். ஆனால் நீதிமானோ தான் செய்யும் வேலையில் நம்பிக்கை உள்ளவனாக மெய்பலனை பெறுகிறவனாக இருக்கிறான். ஏனெனில் அவன் நீதியை விதைக்கிறான்.
.
இயேசுகிறிஸ்து கூறினார், “ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்” (மத்தேயு 7:24-27) என்று பார்க்கிறோம். இதில் கர்த்தருடைய வார்த்தைகளை கேட்டு அதன்படி செய்யாதவன், துன்மார்க்கனுக்கு ஈடாக, அவன் கட்டின வீடு மணலின் மேல் கட்டப்பட்டதாக, காற்று வந்தவுடன் விழுந்து அழிந்து போகிறது.
.
ஆனால் கர்த்தருடைய வார்த்தையை கேட்டு அதன்படி நடக்கிறவன், கன்மலையாகிய கர்த்தரின் மேல் கட்டுகிறபடியால் காற்று அடித்து, பெரு வெள்ளம் மோதினாலும் அது அசையவில்லை. அழியவில்லை.
.
இரண்டு பேரும் கட்டினார்கள், கஷ்டப்பட்டார்கள், முயற்சித்தார்கள், ஆனால் அவர்களின் அஸ்திபாரம் வேறுபட்டிருந்தபடியால், ஒருவரது பிரயாசம் வீணாய் போனது, மற்றது நற்பலனை பெற்றது. கர்த்தரை துணையாக கொண்டு கட்டப்பட்ட வீடு கற்பாறையாகிய கன்மலையாகிய கர்த்தர் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தபடியால் அது நிலைத்து நின்றது. ஆனால், மற்றவரோ, மணலின் மேல், தன் பிரயாசத்தின்மேல், தன் வீணான மாயையின் மேல் நம்பிக்கை வைத்து கட்டினபடியால் அழிந்து போயிற்று.
.
'கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா' (சங்கீதம் 127:1) என்று வேதம் கூறுகிறது. கர்த்தரோடு இணைந்தவர்களாக நாம் கட்டும்போது, அந்த பிரயாசம் ஆசீர்வாதமானதாக இருக்கும். நாம் மெய்ப்பலனை பெறவேண்டுமென்றால், கர்த்தர் மேல் உறுதியாக நம் நம்பிக்கை இருக்கவேண்டும். அப்போது நாம் செய்யும் காரியங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார். நாம் கர்த்தருக்குள் இருந்தால் நாம் செய்வதெல்லாம் வாய்க்கும். ஆமென் அல்லேலூயா!
.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து வேலை செய்தாலும், கர்த்தர் மேல் எங்கள் நம்பிக்கை இல்லாமல் போனால், அது வீணாயிருக்குமே! நாங்கள் கையிட்டு செய்யும் காரியங்களில் உம்முடைய ஆசீர்வாதத்தோடு செய்ய எங்களுக்கு கிருபை பாராட்டும். மெய்ப்பலனை பெற்று கொள்ள கிருபை செய்யும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
No comments:
Post a Comment