உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான் (நீதிமொழிகள் 28:20)
.
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் எத்தனை நம்பிக்கையை கொடுக்கும் வார்த்தைகள் இவை! நூம் உண்மையுள்ளவர்களாயிருந்தால் நமக்கு ஒரு ஆசீர்வாதம்கூட குறையாது. பரிபூரண ஆசீர்வாதம் நமக்கு வந்து சேரும். அல்லேலூயா!
.
மனிதன் மரிக்கும்போது, அவனுடைய பிரேதத்தை வைத்து, அப்போதுதான் பெரிய பெரிய பொய்களை கூறுவார்கள். இவர் மிகவும் நல்லவராக, உண்மையுள்ளவராக இருந்தார் என்றெல்லாம் கூறுவார்கள். கர்த்தருக்குத்தான் தெரியும் அவர் எத்தனை உண்மையுள்ளவராக இருந்தார் என்று.
.
உண்மை என்பது நாம் கர்த்தருக்கு முன்பாக கள்ளத்தனம் இல்லாமல், உத்தமமாக காரியங்களை செய்தோம் என்பதை குறிக்கும். அது ஊழியமாக இருக்கட்டும், நம்மை நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்புகளாக இருக்கட்டும், நம்மை நம்பி கொடுக்கப்பட்ட பண காரியங்களாக இருக்கட்டும் எத்தனை உண்மையாக இருந்தோம் என்பதே முக்கியம். நம் வாழ்நாளிலேயே கண்டிருப்போம், உண்மையாக இருந்தவர்கள் சில சூழ்நிலைகளிலே தங்கள் உண்மையினிமித்தம் பாடுகள் பட்டிருந்தாலும், பின்னர் எவ்வாறாக ஆசீர்வதிக்கபட்டார்கள் என்பதை நாம் கண்டிருக்கிறோம்.
.
உதாரணத்திற்கு யோபு, யோசேப்பு, தானியேல் என்றெல்லாம் கூறலாம். அவர்கள் தங்கள் உண்மையினிமித்தம் பாடுகளை அனுபவித்தாலும், பின்னாளில் மிகவும் ஆசீர்வதிக்கபட்ட நிலையில் இருந்ததை நாம் அறிவோம்.
.
ஆனால் அதே சமயத்தில் தான் ஐசுவரியவானாக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறவன்இ அதாவது குறுக்கு வழியிலாவது எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்பவன் தான் செய்கிற தவறுகளினால் கர்த்தரிடமிருந்து ஆக்கினையையே பெற்று கொள்வான். ஐசுவரியவானாகிறதற்கு தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்கு தப்பான். ஆகானின் கதை நமக்கு தெரியும், சபிக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றை யாருக்கும் தெரியாமல் திருடி தன் கூடாரத்தின் அடியில் ஒளித்து வைத்தான். ஆனால் கர்த்தருக்கு முன்பாக மறைவானது ஒன்றுமில்லை என்பதை மறந்து விட்டான். ஆதனால் இஸ்ரவேலர் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. கடைசியில் கண்டுபிடிக்கப்பட்டபோது கல்லெறிந்து கொன்றுபோடப்பட்டான் (யோசுவா 7ம் அதிகாரம்)
.
உண்மையான வழியில் வந்த ஐசுவரியத்தினால் ஆசீர்வாதமும், குறுக்கு வழியில் வந்த ஐசுவரியத்தினால் சாபமும் வரும். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும், அதனோடே அவர் வேதனையை கூட்டார் என்று வசனம் கூறுகிறதல்லவா? கர்த்தரிடத்தில் எல்லா காரியத்திலும் உண்மையாக இருப்போம். அதினால் பரிபூரண ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எந்த காரியத்திலும் நாங்கள் உண்மையாயிருக்க கிருபை செய்தருளும். பண ஆசையோ மற்ற எந்த காரியங்களும் நாங்கள் உண்மையாயிருக்க தடையாயிராதபடி, உம்முடைய சமுகத்தில் எப்போதும் உண்மையாயிருக்க கிருபை செய்தருளும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
No comments:
Post a Comment